
ஆயுத எழுத்து
போராளிகளின் கைகளில் எழுத்தும் ஓர் ஆயுதமே
விலை போனதோ வாக்குச் சீட்டு....
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது தான் ஜனநாயக மரபு. இந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் காங்கிரஸ் கூட்டணி மட்டுமல்ல.. தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிய இந்திய தேர்தல் ஆணையம், இந்தியாவை தன் கைக்குள் அடக்க நினைக்கும் அமெரிக்கா மற்றும் அமெரிக்க உளவுத்துறை, பணபலம், ரௌடி கலாச்சாரம், தில்லுமுல்லு.. இவைகள் தான் காங்கிரஸ்- தி.மு.க. வெற்றிக்கு பின்னால் இருக்கின்றன.. இனி பாராளுமன்றத்தில் திருப்பாச்சி அருவா .. சைக்கிள் செயின் இதெல்லாம் கிடைக்கும்.. வரும் ஐந்தாண்டுகளில் மக்கள் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது.. இடது சாரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட சூழ்நிலையில் இந்த தேசம் மீண்டும் தேசத்துரோகிகளின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.. தேசம் இனி மெல்லச்சாகும்..
**************************************************************************
''வாசிப்பை நேசிப்போம்"
இன்றைக்கு நம் நாட்டில் மக்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் என்பது குறைந்துகொண்டே போகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் வாசிப்பு பழக்கமே இல்லாமல் போய்விட்டது.அதற்கு இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை, கணினி போன்ற அறிவியல் வளர்ச்சி, தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பு இவைகள் தான் வாசிப்பு குறைந்ததற்கான காரணங்களாக அறியப்படுகிறது. நாமெல்லாருமே பொதுவாக வெளியூர்களுக்கு சுற்றுலா போவதற்கு நிறைய செலவுகள் செய்வோம். திரைப்படங்கள் பார்ப்பதற்கு நிறைய செலவுகள் செய்வோம். பண்டிகைகள் திருவிழாக்கள் என நிறைய செலவுகள் செய்வோம். உணவுசாலைக்கு சென்று நாவிற்கு சுவையான உணவுகளை சாப்பிடுவதற்கு நிறைய செலவு செய்வோம். ஆனால் பத்து ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் வாங்குவதற்கு தயங்குகிறோம். அதற்காக மேலே சொன்னவைகளெல்லாம் தவறான செயல்பாடுகள் என்று சொல்லவில்லை. குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான உறவை வளர்ப்பதற்கு, குழந்தைகள் மகிழ்ச்சியாய் பொழுதை கழிப்பதற்கு, எந்திரமயமான வாழ்க்கைக்கு நடுவே ஒரு மாறுதலுக்கு அந்தமாதிரியான செயல்பாடுகள் அவசியம் தான். அதேபோல் புத்தகம் வாங்குவதிலும் புத்தகத்தை வாசிப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.நம் குழந்தைகள் மத்தியிலும் வாசிப்பு பழக்கத்தை உண்டுபண்ணவேண்டும்.நல்ல புத்தகங்கள் தான் மிக சிறந்த நண்பர்களாக இருக்கமுடியும். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் இன்றைக்கும் அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வளர்க்கிறார்கள். அதனால் தான் இங்கிலாந்து அயர்லாந்து நாடுகளில் மட்டும் பல ஆண்டுகளாய் ஆண்டுதோறும் மார்ச் 5 அன்று உலக புத்தக நாள் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்களை பரிசாக அளிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பொதுவாகவே அவர்கள் மற்றவர்களுக்கு பரிசளிப்பதேன்றால் புத்தகங்களை மட்டுமே வழங்குவார்கள். இந்த இரு நாடுகளை தொடர்ந்து தான் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் ஏப்ரல் 23 ஐ உலக புத்தக தினமாக அறிவித்தது. இன்றைக்கு நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இந்த புத்தக தினம் கொண்டாடபடுகிறது.
நாமும் இத்தினத்தில் நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி நம் வீட்டு குழந்தைகளுக்கு பரிசாக அளிப்பதன் மூலம் சிறந்த முறையில் கொண்டாடுவோம். புத்தகங்களை மறந்த - வாசிப்பை மறந்த சமூகம் அழிந்து போகுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே நம் சமூகத்தை சிறந்த முறையில் பாதுகாக்க நம் வருங்கால தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்ட வாசிப்பை நேசிப்போம்.. # வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் உருவாக்கி வளர்ப்போம். # கண்டிப்பாக வீட்டுக்குகொரு நூலகம் அமைப்போம். # புத்தகங்களை மட்டுமே பரிசாக வழங்குவதை வழக்கமாக கொள்வோம்.# புத்தகங்களை எடைக்கு போட்டு காசாக்காமல் பொக்கிஷமாய் பாதுகாப்போம்.
நல்ல புத்தகங்களுக்கு பாரதி புத்தகாலயம் புத்தகங்களையே நாடுங்கள்.
****************************************************************************************************
பூமி சூடாகிறது.. இதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் ஒவ்வொருவருடைய முக்கியமான கடமையாகும்.. அப்போதுதான் நம் வருங்கால தலைமுறையினர் நிம்மதியாக வாழமுடியும். அதற்கு கொதிக்கும் நம் பூமியை குளிரச்செய்யவேண்டும்.. அதற்காக நாம் செய்யவேண்டியது என்னன்னா.. # நாம் பயன்படுத்தும் வாகனங்களில் பெட்ரோல் - டீசல் உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் அல்லது குறைத்துகொள்ளவாவது வேண்டும். # அதேபோல் வீடுகளில் - அலுவலகங்களில் - வியாபாரதளங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன இயந்திரம் மற்றும் குளிர்சாதன பெட்டிபயன்படுத்தபடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். # வீடுகளிலும், வீட்டைச்சுற்றிலும், சாலையோரங்களிலும் நிறைய மரங்களைஅவசியம் வளர்க்கவேண்டும். குறிப்பாக மாமரம், அரசமரம் நல்லது. ( மாமரம் - கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டையாக்சைடு வாயுக்களை அதிகமாக உறிஞ்சக்கூடிய தன்மைவாய்ந்தது. அரசமரம் - இருபத்திநான்கு மணி நேரமும் ஆக்சிஜன் வாயுவை வெளியிடக்கூடிய தன்மையுடையது )# கூடியமட்டும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். மக்காத இந்த பொருட்களை பூமியில் கண்ட கண்ட இடங்களில் போடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். # நம் கல்வி முறையை அறிவுபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் மாற்றியமைத்தால் தான் இது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்று நம்மால் முடிந்தவைகளை அறிவுபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் செய்வதன் மூலம் சூடேறும் பூமியை குளிரச்செய்வோம்.. நம் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாப்போம்..
**************************************************