மேற்கு வங்க இடது முன்னணி அரசை வாழ்த்துவோம்


செங்கொடி உயர்த்தி பிடிப்போம்

மேற்கு வங்க இடது முன்னணி அரசு ஜூன் 21 ஞாயிறு அன்று 33 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1977 ஆம் ஆண்டில் இதே நாளில், ஜனநாயக முறைப்படி நடைப்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பதவியேற்று இன்று வரை 32 ஆண்டுகளையும் கடந்து தொடர்வது என்பது உலக ஜனநாயக வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாகும்.
இதை பொறுக்க மாட்டாத சீர்குலைவு பிற்போக்கு - வகுப்புவாத சக்திகளான பி ஜே பி., மம்தாவின் திரினாமுல் காங்கிரஸ், நக்சலைட் அமைப்புகள் மற்றும் இவர்களை தூண்டிவிடும் அந்நிய சக்திகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இவைகளெல்லாம் ஒன்றாக கைகோர்த்து மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அமைதியை குலைக்கும் வண்ணம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. # படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில் வளர்ச்சியை சீர்குலைவு செய்யும் வண்ணம் சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் கலகத்தை அரங்கேற்றி தொழிற்சாலைகளை விரட்டியடித்ததும், # லால்கார் பகுதியில் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடி இன மக்களை தூண்டிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதும், # ஒன்று பட்ட மாநிலத்தை துண்டாக்குவதன் மூலம் இடது முன்னணி அரசை செயலிழக்கச்செய்து விடலாம் என்ற நப்பாசையில் டார்ஜிலிங், கூச்பிகார், ஜல்பைகுரி மாவட்டங்களில் தனிமாநிலம் என்ற முழக்கத்தை கிளப்பிவிட்டு வன்முறையையும் கலவரங்களையும் தூண்டிவிட்டதும் மேற்கூறிய நாசகர கும்பல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகளையும் மீறி அங்கே செங்கொடி விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த நாசகர கும்பலும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று சேர்ந்து வெற்றிபெற்றாலும், இடது முன்னணிக்கு ஏற்பட்ட தோல்வி என்பது தற்காலிகமானதே. உயர்ந்து நிற்கும் செங்கொடி மீண்டும் வெற்றிபெற்று மாற்ற மாநிலங்களுக்கும் எப்போதும் போல் வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி செய்வதற்கு தேவையான அதிக பெரும்பான்மையுடன் இருந்தாலும் தனித்து தான் மட்டும் ஆட்சி செய்யாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மற்ற இடதுசாரி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களித்திருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
*********************************************************************************

ஜூன் 17- பொதுஉடைமை போராளியின் நினைவை போற்றுவோம்..


பொதுத்துறை எல். . சி யை பாதுகாப்போம்..

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1956 ஆம் ஆண்டுக்கு முன்
248 கம்பனிகளாக தனியார்களின் கையில் இருந்த இன்சூரன்ஸ் துறை இந்திய உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடித்த சூழ்நிலையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்கிற தொழிற்சங்கத்தை தோற்றுவித்து தனியார் இன்சூரன்ஸ் கம்பனிகள் செய்து வந்த கொள்ளைகளை எதிர்த்து குரல்கொடுத்து இன்சூரன்ஸ் துறையை
தேச உடைமையாக்க வேண்டும் போராடி வெற்றிகண்ட மறைந்த
தோழர். சரோஜ் அவர்களின் நினைவை போற்றுவோம்..
இவர்கள் போன்ற தலைவர்களெல்லாம் பல தியாகங்கள் செய்து போராடி உருவாக்கிய பொதுத்துறை எல். ஐ. சி யை - இன்சூரன்ஸ் துறையை அந்நிய சக்திகள் - ஏகாதிபத்திய முதலாளிகள்சூறையாடி கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசானது சட்டபூர்வமாக அனுமதியளிக்க வேகமாக முயற்சி செய்து வருவது
கண்டிக்க வேண்டிய செயலாகும்.
இப்படிப்பட்ட தோழர்கள் தோற்றுவித்த தொழிற்சங்கத்தில் நானுமொரு உறுப்பினராய் இயங்குவதில் பெருமைகொள்கிறேன்..
*******************************************************

இது தான் காங்கிரசின் சுயரூபம்..


அது ஒரு கரு நாகம்..

எண்ணிக்கை உயர்ந்த உடன் அதன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது..
காங்கிரஸ் கட்சி மட்டுமே தனிப்பெரும்பான்மை பெற்று
மத்தியில் ஆட்சி நடத்தும் போதெல்லாம் தங்களுக்கு வேண்டாத மாநில அரசுகளைத் தான்தோன்றித்தனமாக கலைப்பதும், தன் அரசியல் எதிரிகளை தருதலைத்தனமாக பழிவாங்குவதும், அதற்கு தன் எவலாளாக மாநில ஆளுநர்களையே பயன்படுத்திக்கொள்வதும் காங்கிரஸ் கட்சியின் குணாம்சமாகும்.. அது தான் அதன் கலாச்சாரமுமாகும்.. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆரம்பித்து வைத்த இந்த கலாச்சாரம் இன்று மன்மோகன் வரை தொடர்கிறது.. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்ய தேவையான எண்ணிக்கை கிடைத்துவிட்டால் போதும் அதற்கு எதேச்சதிகார திமிரும் கூடவே வந்துவிடும்..
அண்மை ஆண்டுகாலமாக மக்களவையில் காங்கிரசுக்கு தேவையான எண்ணிக்கை இல்லாமல் மாநில கட்சிகளையே நம்பி இருந்ததால் அதனுடைய அதிகாரப்பல் பிடுங்கப்பட்டு எதேச்சதிகார விஷத்தை கக்குவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அனால் இந்த 15 வது மக்களவை தேர்தல் முடிவு வெளியானவுடன் அந்த கருநாகத்தின் எதேச்சதிகார விஷப்பல் வலுப்பெற்றுவிட்டது. மீண்டும் அதன் பழைய சாக்கடை கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது..
அந்த கலாச்சாரப் புழுதி தான் மீண்டும் கேரளா மாநிலம் பக்கம் வீச ஆரம்பித்திருக்கிறது. கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பினராயி விஜயன் எதிராக சேற்றை வாரி இரைத்திருக்கிறார்கள். ஆளுநரைப் பயன்படுத்தி அவருக்கு எதிரான விசாரணைக்கு ஏற்பாடு செய்திருப்பது காங்கிரசின் சாக்கடை குணாம்சத்தின் ஒரு பகுதியே ஆகும்.
முன்பு எல்லா மாநிலங்களிலும் ஆட்சியிலிருந்த போதும் இப்போது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களிலும் மத்தியிலும் ஊழல் பெருச்சாலிகளை தன்னகத்தே வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி தோழர். பினராயி விஜயன் மீது சேற்றை வாரி இரைப்பதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு காண்கிறது காங்கிரஸ் கட்சி....

*********************************************************

நம்ம கடற்கரைய விக்கபோராங்கோ....



நாமிருக்கும் நாடு நாமதென்பதறிவோம்....

நடுத்தர மக்களும் ஏழை மக்களும் செலவில்லாமல் பொழுதுபோக்கும் இடம் இயற்கை எழில் கொஞ்சும் நம்ம கடற்கரை தானுங்க.. அதான் நம்ம பீச்ச தான்
சொல்றேங்க.. நம் நாட்டை சுற்றி இருக்கிற மூன்று கடற்கரை பகுதிகளை அமெரிக்க முதலாளிகளுக்கு நமது மத்திய அரசாங்கம் விக்கப்போராங்கலாம்..
என்னங்க அநியாயமா இருக்கு..
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைகளின்
ஒரு பகுதியாக இந்திய கடலோரப் பகுதிகளை தனியார்மயப்படுத்தவும், கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள நிலப்பகுதிகளை வெளிநாட்டினர்க்கு விற்பனை செய்வதன் மூலம் ரியல் எஸ்டேட்டிலும் அந்நிய நேரடி முதலீட்டை
அனுமதிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
இதன் மூலம் கடற்கரையோரங்களில் ஒவ்வொரு 30 கி.மீ. க்கு ஒரு துறைமுகம் கட்டிகொள்வதற்கு அமெரிக்க முதலாளிகளுக்கு அனுமதியளிப்பது என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அவர்கள் எத்தனை கி. மீ. வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். அவர்களிடம் விலையோ வாடகையோ மிகக்குறைவாகத் தான் வசூலிப்பார்கள்.
# அப்படி கட்டப்பட்ட துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்துக்கு தேவையான ஆழம் போதாது. எனவே 16 மீட்டர் வரை ஆழப்படுத்திக்கொள்வார்கள். அப்படி ஆழப்படுத்துவதற்கு தூர்வாரி எடுக்கப்படும் மணல் குவியல்களை என்ன செய்யப் போராங்கத் தெரியுமா.. அலை வந்து மோதும் அந்த கரையை ஒட்டியப் பகுதியிலேயே - கடல் தண்ணீரிலேயே கொட்டி பெரிய பரப்பளவுள்ள மணற்பகுதியை உருவாக்குவாங்க.. அப்படி உருவாக்கப்படும் நிலப்பகுதியே குறைந்தது 200 ஏக்கருக்கு மேல் கிடைக்குமாம்... அதை வெச்சி என்னா செய்வாங்கனா..!
குறைந்த வாடகைக்கு துறைமுகத்தை நடத்தும் அந்த அந்நிய முதலாளிகள் புதிதாய் உருவாக்கிய அந்த நிலப்பகுதியை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்வார்கள்.. அதுவும் யாருக்குன்னா.. அமெரிக்க முதலாளிகளுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது..
# அப்படி வாங்கிய அந்த நிலப்பகுதியில் அந்த முதலாளிகள் நட்சத்திர ஓட்டல்கள் கட்டிப்பாங்கலாம்.. ரிசார்ட்.. மால்.. இப்படி என்னென்னமோ சொல்றாங்க.. அதெல்லாம் கட்டிப்பாங்கலாம்.. சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கலாமாம்.. தொழிற்சாலைகளெல்லாம் வருமாம்.. வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட ரசாயன தொழிற்சாலைகளெல்லாம் வருமாம்.. டவுன்ஷிப் கூட உருவாக்கலாமாம்..சிறிய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அங்கு இறங்குவதற்கு வசதி செய்யப்படுமாம்.. இது எப்படி இருக்கு.. நல்லா இருக்கு இல்ல..
# அதுமட்டுமல்ல.. இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் கடற்பகுதியில் கிடைக்கும் மீன் இறால் போன்ற கடல் உணவுப் பொருட்களை
அமெரிக்காவிலிருந்து வரும் கப்பல்கள் மூலமாக கொள்ளையடித்து செல்வார்களாம்.. குடும்பத் தொழிலாக - பாரம்பரியத் தொழிலாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நம் நாட்டு மீனவர்கள் இனி மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டார்களாம்.. அவங்க வாய்ல மண்ணு தான்.. நமக்கும் இனிமேல் மீன் இறால் கிடைக்காது.. வசதியுள்ளவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள்..
இப்படி துறைமுகம் வருவதால் என்ன நன்மை.. நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும்.. யாருக்குன்னா.. அமெரிக்க இளைஞர்களுக்குத்தான்.. நல்லா இருக்கு இல்ல.. நம் நாட்டு இளைஞர்கள் வாயில கைய வெச்சிகிட்டு இருக்கவேண்டியது தான்.
இந்த துறைமுகம் வருவதனால் நமக்கென்ன பாதகம்..
# பாரம்பரிய தொழில் செய்யும் நம் மீனவர்களுக்கு வேலையிழப்பு.. வருமானம் இழப்பு.. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்..
# கடற்கரையை ஒட்டியே காலங்காலமாக வாழ்க்கை நடத்தும் மீனவர்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்..
# நிலத்தடிநீர் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும்.. ( கவலைபடவேண்டாம் அங்கிருக்கும் mall லில் பாக்கெட்டிலும் பாட்டிலிலும் கண்டிப்பாக குடிநீர் கிடைக்கும்)
# கடற் பகுதியிலிருந்து 30 கி.மீ. வரை விவசாயம் பாதிக்கப்படும்.. (எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும்)
# கடல் உணவுகளான மீன், இறால் போன்றவை கொள்ளைபோகும்.. கடல் உணவிலும் பஞ்சம் ஏற்படும்..
# கடல் நீரும் காற்றும் மாசுபடும்.. சுற்றுசூழல் பாதிக்கப்படும்..
# வாரந்தோறும் நம் வீட்டுக் குழந்தைகளை பீச்சுக்கு போகலாம்னு அழைத்துச் செல்கிறோமே.. அது இனி முடியாது.. பீச்சு போய் பாக்கனும்னா நுழைவுகட்டணம் வசூலிப்பார்கள்.. காசுக் கொடுத்து தான் இனி நாம் பீச்சில் காற்று வாங்க வேண்டும்.. பீச்சை இப்பவே படம்பிடித்து வெச்சிக்கொங்கோ..
இனிமேல்.. கடலோரம் வாங்கிய காற்று
குளிராக இருந்தது நேற்று.. அப்படின்னு தான் நாம் பாடவேண்டியிருக்கும்..
ஒன்னே ஒன்னு சொல்லிக்க்றேனுங்க இவ்வளவு சொல்லியும் நமக்கு கோபமே வராதுங்க..
**********************************************************

ஜூன் 8 - உலக கடல்கள் தினம்




கடல் அன்னையை பாதுகாப்போம்....

08 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit) உலக கடல் தினம் (World Ocean Day) அனுசரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு ஐ. நா. சபை இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் இந்த ஆண்டு முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள் தினமாக (World Oceans Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
பூமி உருண்டையில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ள கடல்களால் நமக்கு என்ன நன்மைகள்..
# நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறது.
# பூமியின் வெப்பத்தை குறைக்கிறது.
# சுற்றுச் சூழலை பாதுகாக்கிறது.
# மீன் போன்ற கடல் உணவுகளை நமக்கு தருகிறது (கடல் உணவு மூளை
வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகிறது)
# கடல் வாழ் உயிரினங்கள் மூலம் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.
# கடல் சார்ந்த வேலைவாய்ப்பையும் அதற்கேற்ற வருமானத்தையும்
தருகிறது.
# எல்லாவற்றிற்கும் மேலாக நம் சமையல் சுவைபட நாம் சேர்க்கும் உப்பை
தருகிறது.
எனவே உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்போம்.. கடல் அன்னையை பாதுகாப்போம்.. கடல் உயிரினங்களையும் பாதுகாப்போம்..
***************************************************************************

நெஞ்சு பொறுக்கதில்லையே....!

யாரை நொந்துகொள்வது..
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை
நிறைவேற்றினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்
என்று சொன்னது யார் தெரியுமா..? சாதாரண பாமரன் அல்ல.. ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் தான் இப்படி
திருவாய் மலர்ந்தது.. அதுவும் எங்க பேசியிருக்கார் தெரியுமா..?
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசியபோது இவ்வாறு மிரட்டி இருக்காரு..
ஏற்கனவே முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்களும்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.. சமூக நீதிக்கு எதிரான இது போன்ற கட்சிகளின் இம்மாதிரியான செயல்பாடுகள் அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது..
யாரை நொந்துகொள்வது..? இவர்களையா..! இவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களையா..!
"பாதகம் செய்பவரைக் கண்டால்
நீ பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" - இது பெண்களுக்கு வீரத்தை
ஊட்டுவதற்கு புரட்சிக்கவி பாரதி எழுதிய வீர வரிகள்.. இருந்தாலும் இந்த பாட்டுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.. இந்த பாட்டையும் அவர்களையும்
ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை.. ஆமா சொல்லிட்டேன்..
**********************************************************

தேவை சாதாரண மக்களுக்கான பட்ஜெட்

சாதாரண மக்களுக்கான - தொழிலாளருக்கான பட்ஜெட் தேவை - சி. . டி. யு கோரிக்கை

மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான
அரசு வரும் ஜூலை மாதம் தனது முதல் பட்ஜெட்டினை அளிக்க இருக்கிறது.
இது சம்பந்தமாக பட்ஜெட் எப்படி அமைய வேண்டும் என்பதை நமது மத்திய
நிதியமைச்சர் இந்திய நாட்டின் பெருமுதலாளிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார். நம் நாட்டின் மொத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு
அம்பானிகள் உட்பட 48 கோடீஸ்வரர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால்
80 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களின் தினசரி வருமானம் வெறும்
20 ரூபாய்க்கு குறைவானது. இவர்களை பற்றிய அக்கறை இந்த அரசுகளுக்கு
எப்போதுமே இருந்ததில்லை. அந்த 48 கோடீஸ்வரர்களுக்கு பல வரிச்சலுகைகளை அறிவித்து அவர்கள் மேலும் மேலும் சொத்துக்களை
குவிப்பதற்கான பட்ஜெட்டாகத்தான் இருக்குமே தவிர சாதாரண மக்களுக்கு
பயனளிக்கும் பட்ஜெட்டாக இருக்காது. மாறாக சாதாரண மக்களை தொழிலாளர்களை பாதிக்கிற பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.
இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு தலைவர் எம்.கே.பாந்தே
மற்றும் பொதுச்செயலாளர் முகமது அமீன் ஆகியோர் மத்திய நிதியமைச்சர்
பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். இது வழக்கமா நடக்கிற ஒன்னு தான். வருடா வருடம் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு பட்ஜெட் முன்மொழிவை நிதியமைச்சரிடம் கொடுப்பார்கள். மத்திய தொழிற்சங்கமும்
கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பார்கள். இதையெல்லாம்
மத்திய நிதியமைச்சர் சம்பிரதாயத்திற்கு வாங்கி வைத்துக்கொள்வார். ஆனால்
அவர் செய்வதை தான் செய்வார்.
சி. ஐ. டி. யு. கேட்டிருக்கும் கோரிக்கைகளில் சில..

#
அரசின் வருமானத்தில் 25 சதவீதத்தை கல்வி, சுகாதாரம், குடியிருப்பு போன்ற சமூகத்துறைகளுக்குஒதுக்கவேண்டும்.
# பொது விநியோக முறையை - ரேஷன் முறையை வலுப்படுத்தவேண்டும்.
# ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டத்திற்கு ரூ. 12000 கோடி ஒதுக்கீடு
செய்யவேண்டும்.
# விவசாய உற்பத்தியை அதிகரிக்க பொது முதலீட்டை உயர்த்த வேண்டும்.
# வேளாண் விளைபொருட்களுக்கு நியாய விலையை உறுதி செய்யவேண்டும்.
# முறைசாரா தொழிலாளர் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
# அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில்
ஏராளமானோர் வேலை இழந்திருப்பதை கருத்தில் கொண்டு பல்வேறு அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் நடைமுறையில் உள்ள
வேலை நியமன தடைச்சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.
# அப்படி வேலையிழந்த 15 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.
# உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியான பி.எப். மற்றும் பென்ஷன் நிதிகளை
தனியார்க்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடவேண்டும்.
# வருமான வரி உச்சவரம்பை ரூ. 2 லட்சமாக உயர்த்தவேண்டும்.
# லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை
செய்யக்கூடாது.
# வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் பொதுத்துறையை வலுப்படுத்த வேண்டும்.
# பெரிய மனிதர்கள் வங்கிகளில் வாங்கியிருக்கும் வராக் கடனை வசூல் செய்யவேண்டும்.

இப்படி மக்கள் நலன் சார்ந்த ஏராளமான ஏராளமான் கோரிக்கைகளை
அரசின் முன் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த பிரணாப் முக்கர்ஜிக்கு தான்
வெளிச்சம். பெருமுதலாளிகளும் அமெரிக்க எசமானரும் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்வாரு.
தயவு செய்தித்தாள்களில் வரும் பட்ஜெட் செய்திகளை முழுமையாய் படியுங்கள். மேற்கண்ட கோரிக்கைகளை நிதியமைச்சர் தனது பட்ஜெட்டில் குறிப்பிட்டிருகிறாரா என்பதை கண்காணியுங்க. இரண்டையும் ஒப்பிட்டு பாருங்க.. அப்போது தான் அரசு செய்கிற தவறுகள் என்ன என்பது தெரியும்.
இந்த அரசின் லட்சணம் புரியும்.
***********************************************************

நாடாளுமன்றத்தை வழிநடத்த முதல் பெண்மணி


முதல் பெண் சபாநாயகரை வாழ்த்தி வரவேற்போம்....

இந்தியாவின் மதிப்புமிக்க பாராளுமன்றத்தின் உயர் பொறுப்புக்கு
முதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதிலும்
ஒரு தலித் பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியுடன்
வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவின் குடியரசுத் தலைவராக
இடதுசாரிகளின் முயற்சியால் முதல் முறையாக ஒரு பெண்மணி
தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு நல்ல தொடக்கமாகவும், சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்திருக்கிறது.
மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் பெண்களுக்கு அளிக்கவேண்டிய
அங்கிகாரமும் பங்கும், இந்தியா விடுதலை அடைந்து 62 ஆண்டுகள்
கழித்து தாமதமாக கிடைத்தாலும் இது ஒரு நல்ல மாற்றமே.
மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது.
அதிலும் மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டையே கிடப்பில்போட்ட ஆணாதிக்க சிந்தனையாளர்களை கொண்ட நம் பாராளுமன்றத்தில்
அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு பெண்மணியை
தேர்ந்தெடுத்திருப்பது ஒரு நல்ல மாற்றமே..
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்" என்ற புரட்சிக்கவி பாரதியின்
வரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை சபாநாயகர் அம்மையார் அவர்கள்
பல ஆண்டுகளாக திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள 33% மகளிர் இடவொதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் அக்கறைகாட்டவேண்டும்.. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள
வேண்டுமென கேட்டுகொள்கிறோம்.
********************************************************